மரக்காணம் அருகே, சாலை விபத்தில் ஆம்ஆத்மி கட்சி பிரமுகர் பலி

மரக்காணம் அருகே சாலை விபத்தில் ஆம்ஆத்மி கட்சி பிரமுகர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

Update: 2019-03-07 22:45 GMT
விழுப்புரம்,

மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு காலனி பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 62), ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் ஆவார். இவர் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்றார். பின்னர் இரவு அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு கூனிமேடுக்கு வந்து இறங்கினார். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக ஜெனரேட்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அரிகிருஷ்ணன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்துக்கு காரணமான அந்த சரக்கு வாகனத்தை மரக்கட்டையால் அடித்து நொறுக்கினர். இதனால் சரக்கு வாகனம் சேதமடைந்தது. அதோடு சரக்கு வாகன டிரைவரையும் தாக்க முயன்றனர். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரக்கு வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்