சேலம் மாவட்டத்தில் 3.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை மறுநாள் வழங்கப்படுகிறது
சேலம் மாவட்டத்தில் 3.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நாளை மறுநாள் வழங்கப்படுகிறது.
சேலம்,
சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் 3 ஆயிரத்து 612 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படுகிறது.
ஏற்காட்டில் 6 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும், அயோத்தியாப்பட்டணம், வீரபாண்டி மற்றும் எடப்பாடி பகுதிகளில் தலா ஒரு நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள் மூலமாகவும், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்களில், போக்குவரத்து முகாம்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரு நகர பஸ் நிலையங்கள், ரெயில் நிலைய சந்திப்புகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
சுகாதாரத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி துறையை சேர்ந்தவர்கள் என 10 ஆயிரத்து 57 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 89 குழந்தைகளுக்கு ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து கொடுத்து தங்கள் குழந்தைகளை போலியோ நோய் தாக்காமல் இருக்க பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.