மண்டபம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி புதுமண தம்பதி பலி

மண்டபம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் புதுமண தம்பதி பரிதாபமாக பலியானார்கள்.

Update: 2019-03-06 22:45 GMT

பனைக்குளம்,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 41). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்டபத்தைச் சேர்ந்த பிரமிளா (32) என்பவரை திருமணம் செய்து கொண்டு உச்சிப்புளி அருகே உள்ள துத்திவலசை கிராமத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்தார்.

மண்டபம் ஓடைத்தோப்பில் வசித்து வந்த சந்திரசேகரின் மாமனார் சில தினங்களுக்கு முன்பு இறந்ததைத் தொடர்ந்து, பிரமிளா தனது தந்தையின் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் சந்திரசேகர் தனது மனைவி பிரமிளாவை அழைத்து வருவதற்காக மண்டபம் ஓடைத்தோப்புக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து பிரமிளாவை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சுத்திவலசைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தகோன்வலசை ஊராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, ராமேசுவரம் சென்று கொண்டிருந்த மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பழனி என்பவர் ஓட்டி வந்த கார் சந்திரசேகர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரமிளா ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரில் வந்த கணபதியும், மாரிச்சாமியும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் இறந்த சந்திரசேகர் மண்டபம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து பார்த்து வந்தார். விபத்து குறித்து மண்டபம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்