பெருந்துறை அருகே மோட்டார்சைக்கிள்– சரக்கு ஆட்டோ மோதல்; கல்லூரி மாணவர் சாவு
பெருந்துறை அருகே மோட்டார்சைக்கிளும் சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பெருந்துறை,
ஈரோடு பெரியசேமூர் ஜீவாநகரை சேர்ந்தவர் சரண் (வயது 16). கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (19). இவர்கள் 2 பேரும் பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் 2–ம் ஆண்டு படித்து வந்தனர்.
விக்னேஷ் நேற்று காலை கருமத்தம்பட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையம் அருகே சென்றபோது அங்கு கல்லூரி செல்ல நின்றிருந்த சரணையும் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் ஏற்றினார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
வாய்க்கால்மேடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவும், இவர்களது மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். விக்னேஷ் ஹெல்மெட் அணிந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.
சரணுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரண் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.