பாலத்தில் பிணமாக தொங்கிய சாயப்பட்டறை தொழிலாளி கொலையா? போலீசார் விசாரணை

வலங்கைமான் அருகே பாலத்தில் சாயப்பட்டறை தொழிலாளி ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-06 22:15 GMT
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சுள்ளானாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் நைலான் கயிற்றில் தொங்கியபடி ஒருவர் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். சாலை பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது65) என்பதும், அவர் கும்பகோணம் பகுதியில் உள்ள பட்டுநூல் சாயப்பட்டறை தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு வந்த துரைராஜ் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது பற்றி வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்