பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யக்கோரி சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி,
புதுவையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மார்ச் 1-ந்தேதி முதல் தடை செய்யப்படும் என்று அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பிளாஸ்டிக் தடை அமலாகவில்லை. இதுகுறித்து அரசின் ஆணையும் வெளியிடப்படவில்லை.
இதை கண்டித்தும், பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரியும் பாரதீய ஜனதா கட்சியினர் அண்ணா நகரில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் தடை செய்யாதது ஏன்? என்று பாரதீய ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் பெருமளவு பணம் கைமாறி இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.