இந்திய விமானப்படை தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு சிவசேனா சொல்கிறது
இந்திய விமானப்படை தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்று சிவசேனா சொல்கிறது.
மும்பை,
இந்திய விமானப்படை தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு என்று சிவசேனா சொல்கிறது.
பதிலடி தாக்குதல்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் மோடி அரசுக்கு கேள்வி எழுப்பி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:-
புலவாமா தாக்குதலுக்கு பலியான 40 துணை ராணுவத்தினரின் வீரமரணத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் நாட்டு விமானப்படை பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளின் முகாமில் குண்டு மழை பொழிந்தது. இதில் அந்த அமைப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
மக்களுக்கு உரிமை உண்டு
இந்த விமானப்படை தாக்குதலை பற்றிய விவாதங்கள் அனைத்தும் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தான். சில எதிர்க்கட்சிகள் பதிலடி தாக்குதலுக்கான ஆதாரம் கேட்கின்றனர்.
இந்திய விமானப்படையினரால் எதிரிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. எதிர்க்கட்சிகள் மட்டும் அல்ல இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் ஊடகங்கள் கூட பதிலடி தாக்குதலை பற்றி கேள்வி எழுப்புகின்றன. இவ்வாறு கேட்பதனால் நம் ராணுவத்தினரின் மன உறுதி குறைந்து போவதில்லை.
புலவாமா தாக்குதலுக்கு 300 கிலோ வெடிபொருட்கள் எப்படி கொண்டு வரப்பட்டது? பதிலடி தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்? இப்படிபட்ட கேள்விகள் தேர்தல் நடக்கும் வரை விவாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.
கிண்டல்
இதன்மூலம் புலவாமா தாக்குதலுக்கு முன்பு வரை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நாட்டின் பணவீக்கம், வேலையின்மை, ரபேல் போர் விமான பேரம் போன்ற அனைத்து முக்கிய பிரச்சினைகளும் ஓரங்கட்டப்பட்டு விட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ராமர்கோவில் விவகாரம், விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக மோடி அரசு குண்டு வீசி விட்டது என கிண்டலடிக்கப்பட்டு இருந்தது.