விவாகரத்தான கணவரிடம் கூடுதல் பராமரிப்பு தொகை கேட்பதற்காக 3 வயது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய தாய் கைது

3 வயது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-06 00:00 GMT
தானே,

3 வயது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். விவாகரத்தான கணவரிடம் கூடுதல் பராமரிப்பு தொகை கேட்பதற்காக அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

விவாகரத்தான தம்பதி

மராட்டிய மாநிலம் தானே மும்ராவை சேர்ந்தவர் பையாஸ் சேக். இவருக்கும், ஹீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

மகனை பராமரிப்பதற்காக பையாஸ் சேக் மாதந்தோறும் ஹீனாவிற்கு ரூ.6 ஆயிரம் அனுப்பி வந்தார். இந்த நிலையில், பராமரிப்பு தொகையை அதிகரித்து வாங்க அவர் விபரீத செயலில் இறங்கினார்.

கொடூர தாக்குதல்

இதற்காக அப்பெண் தான் பெற்ற பிள்ளை என்றும் பாராமல் தனது 3 வயது மகனை கண்மூடித்தனமாக கரண்டியால் தாக்கி இருக்கிறார். சிறுவனை நிர்வாணப்படுத்தி இந்த கொடூர தாக்குதலில் அவர் ஈடுபட்டு உள்ளார். அந்த காட்சிகளை செல்போனில் வீடியோ பதிவு செய்து அதை விவாகரத்தான கணவர் பையாஸ் சேக்கிற்கு அனுப்பினார்.

இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து ஹீனா மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஹீனாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் 75-வது பிரிவின் (சிறுவர்களுக்கு எதிரான சித்ரவதை) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஹீனா தனது மகனை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்