தேர்தலில் தோல்வியே சந்திக்காத தலைவர் கலபுரகியில் மல்லிகார்ஜுன கார்கேவை வீழ்த்த பா.ஜனதா வியூகம்

கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவை வீழ்த்த பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.

Update: 2019-03-05 22:30 GMT
பெங்களூரு, 

கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவை வீழ்த்த பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.

அனல் பறக்கும் பேச்சுகளால்...

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜுன கார்கே. அவர் நாடாளுமன்றத்தில் தனது கம்பீரமான அனல் பறக்கும் பேச்சுகளால் மத்திய பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இந்தியிலும், ஆங்கிலத்திலும் மிக புலமையுடன் பேசும் அவர், மத்திய அரசின் குறைகளை, தவறுகளை மிக சாமர்த்தியமான முறையில் எடுத்து வைத்தவர். தனக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை மிக சரியான முறையில் நிர்வகித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களின் பாராட்ைட பெற்றுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே, 2009-ம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொழிலாளர் நலத்துறை, ரெயில்வேத்துறை மந்திரியாக திறம்பட செயலாற்றினார். அதன் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் 2-வது முறையாக வெற்றி பெற்றார். தலித் சமூகத்தை சேர்ந்த அவருக்கு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது கர்நாடகத்தில் காங்கிரசார் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தோல்வியே சந்திக்காத தலைவர்

அவர் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு, கர்நாடக சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக 11 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் கர்நாடக சட்டசபைக்கு 9 முறையும், நாடாளுமன்றத்திற்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மல்லிகார்ஜுன கார்கே, தேர்தலில் தோல்வியே சந்திக்காத தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். 1972-ம் ஆண்டு தொடங்கிய தனது வெற்றி பயணத்தை அவர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு பல முறை முதல்-மந்திரி பதவி மிக அருகில் வந்து கைநழுவி போன வரலாறும் உண்டு. இவ்வளவு காலம் அரசியலில் வெற்றிகரமாக இருந்து செயல்பட்டு வந்தாலும், தனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு எப்போதும் உண்டு. இதை அவரே கட்சி கூட்டங்களில் பல முறை கூறி இருக்கிறார்.

பின்தங்கிய பகுதி

வட கர்நாடகத்தில், ஐதராபாத்-கர்நாடக பகுதியில் உள்ள அவரது தொகுதியான கலபுரகி அமைந்துள்ளது. இது மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும். அந்த பகுதியின் வளர்ச்சிக்காக, அவர் மத்திய மந்திரியாக இருந்தபோது, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, சிறப்பு அந்தஸ்து பெற்று கொடுத்தார்.

இதன் மூலம் அரசின் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் அந்த பகுதிக்கு இட ஒதுக்கீடு பலன் கிடைத்து வருகிறது. இது அவரது சாதனையாக கருதப்படுகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகி தொகுதியில் போட்டியிடுகிறார். ெசல்வாக்கு மிகுந்த அவருக்கு எதிராக சரியான வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

வீழ்த்த வேண்டும்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள உமேஷ்ஜாதவை கலபுரகியில், காங்கிரசின் அகில இந்திய தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. எப்படியாவது மல்லிகார்ஜுன கார்கேவை வீழ்த்த வேண்டும் என்று பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் வியூகம் வகுத்து வருகிறார்கள்.

இதற்காகவே கலபுரகியில் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, காங்கிரசுக்கு எதிராக குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பேச உள்ளார். இதன் மூலம் அந்த தொகுதி மக்களின் ஆதரவை திரட்டுவதே பா.ஜனதாவின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்