வெளிநாட்டு பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

இந்திய அளவில் வெளிநாட்டு பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

Update: 2019-03-05 23:00 GMT
மாமல்லபுரம்,

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக தமிழகத்தில் உள்ள இளம் மற்றும் மூத்த கலைஞர்களின் சிற்ப, ஓவிய கலைகளை மேம்படுத்தவும் படைப்பாளர்களை ஊக்குவிக்கவும் மாநில அளவிலான கலைக் கண்காட்சி மாமல்லபுரம் சிற்பக்கலைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு சிறந்த சிற்ப, ஓவிய கலைஞர்கள் 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு தமிழக கலை பண்பாட்டுத்துறை ஆணையர் ஆர்.சீதாலட்சுமி தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரன் வரவேற்றார்.

விழாவில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு கலைஞர்கள் 40 பேருக்கு விருதும், பரிசுத்தொகையும் வழங்கி பேசியதாவது:-

உலக அளவில் பிரான்ஸ் நாட்டிற்கு வருடத்திற்கு 10 கோடி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். காரணம் நம் நாட்டை போல அங்கு பழங்காலத்தில் சேகரிக்கப்பட்ட வித்தியாசமான கலை பொருட்கள், ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன.

இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் வருகை எண்ணிக்கையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் பெற்று வருகிறது. மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கலைச்சின்னங்கள் வெளிநாட்டு பயணிகளை கவர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காஞ்சீபுரம் எம்.பி. மரகதம்குமரவேல், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் திட்டக்குழு உறுப்பினர் கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், பூங்குழலி, மூத்த சிற்பக்கலைஞர் பாஸ்கரன், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விரிவுரையாளர் க.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்