பிரசவத்தில் குழந்தை இறந்தது: கர்ப்பப்பை எடுக்கப்பட்ட தாயும் சாவு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தாமதமாக பிரசவம் பார்த்ததால், டாக்டர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்தது. இந்த நிலையில் கர்ப்பப்பை எடுக்கப்பட்ட தாயும் நள்ளிரவில் உயிரிழந்தார். இதனை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-05 23:00 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அகஸ்தியா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான அகஸ்தியாவை தலைபிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி சேர்த்தனர்.

அவருக்கு கடந்த 1-ந்தேதி குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் அன்றைய தினம் குழந்தை பிறக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி இரவு அகஸ்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பயிற்சி டாக்டர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டது. மேலும் ஆபரேஷன் செய்தபோது அகஸ்தியாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கர்ப்பப்பையையும் டாக்டர்கள் அகற்றியதாக தெரிகிறது.

சில மணி நேரத்திற்கு பின்னர் இந்த தகவலை உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அகஸ்தியாவின் உறவினர்கள், குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவனிடம் முறையிட்டனர். மேலும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்ப்பப்பை எடுக்கப்பட்ட தாய் அகஸ்தியா இறந்து விட்டதாக நேற்று முன்தினம் நள்ளிரவு அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் பிரசவத்தின்போது நடந்த ஆபரேஷனிலேயே அகஸ்தியா இறந்துவிட்டதாகவும், அதை மறைத்து காலதாமதமாக டாக்டர்கள் தெரிவித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

பின்னர் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து அகஸ்தியாவின் உடலை வாங்க அவர்கள் மறுத்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு உதவி கலெக்டர் முத்து வடிவேலிடம் நீதி விசாரணை வேண்டி கோரிக்கை மனு அளிக்க அகஸ்தியாவின் உறவினர்கள் சென்றனர். ஆனால் உதவி கலெக்டர் அங்கு இல்லை. உடனே உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைவரும் போராட்டம் நடத்தினர்.

உடனே சம்பவ இடத்திற்கு உதவி கலெக்டர் வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், ‘பிரசவத்தில் தாய்-சேய் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிடப்படும்’ என்றும் தெரிவித்தார். மேலும் இறுதிச்சடங்குக்காக ரூ.15 ஆயிரத்தையும் வழங்கினார். இதனால் அனைவரும் கலைந்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்