வருகிற 11-ந் தேதி “தமிழகம் வரும் ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி காட்டுவோம்” - அர்ஜூன் சம்பத் அறிவிப்பு
“வருகிற 11-ந் தேதி தமிழகம் வரும் ராகுல்காந்திக்கு கருப்புக்கொடி காட்டுவோம்“ என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்தார். இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை,
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வருவார். இதற்காக இந்து மக்கள் கட்சி வீடு, வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபடும். தமிழகத்திலும், புதுச்சேரியும் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெறும். இந்த கூட்டணி தமிழர்களின் நலன் காக்கும் கூட்டணியாகும். இந்த கூட்டணியால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் இலங்கையில் தமிழர்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் அரசு இலங்கை ராணுவத்திற்கு உதவி செய்தது. இதனால்தான் கடந்த தேர்தலில் வைகோ, சீமான் போன்றவர்கள் தி.மு.க.வையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். எனவே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை தமிழமக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த ராகுல்காந்தி வருகிற 11-ந்தேதி(திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். அவருக்கு எதிராக நாங்கள் கருப்புக்கொடி காட்டுவோம். தமிழகத்திற்கு எப்போது ராகுல்காந்தி, சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வந்தாலும் அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம்.
புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும், கருத்து வெளியிட்டும் வருகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் மோடிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஓட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் இப்படி சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரின் ஓட்டு உரிமையும் பறிக்கவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கிறிஸ்தவ பாதிரியார்கள் அதிக அளவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு தமிழர்கள் சிறுபான்மையினராக ஆகிவிட்ட னர். கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக மாறி வருகிறார்கள்.
தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடியும், கோவையில் அமித்ஷாவும் போட்டியிடவேண்டும். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி எங்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினாலும் அவர்களுக்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்வோம். ரஜினிகாந்த் கிருஷ்ணகிரியில் பிறந்த பச்சை தமிழன், அவர் அரசியலில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன். அய்யா வைகுண்டரை வழிபடுகின்ற அய்யா வழி பக்தர்களும் இந்துக்கள் தான். அவர்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது சரியல்ல.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.