இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தார்கள் உள்ளிருப்பு போராட்டம்
இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாசில்தார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
நாடாளுமன்ற தேர்தலை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்கள் மற்றும் தனி தாசில்தார்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை தங்களை பாதிப்பதாகவும், இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடிக்கம்பத்தின் கீழ் பகுதியில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஊட்டி தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகங்களிலும் தாசில்தார்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் குமாரராஜா கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட தாலுகா அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் தாசில்தார்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் தனி தாசில்தார்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்ற பெயரில் வருவாய்த்துறை நிர்வாகம் எங்களை கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து உள்ளது. இன்னும் சில அலுவலர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் மாவட்ட அளவில் பணி மூப்பு அடிப்படையில் தாசில்தார்களாக பணிபுரிந்து வருகிறோம்.
தாசில்தார் பணிக்கு பின்னர் எங்களுக்கு பணி உயர்வு மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. எனவே, எங்களை நீலகிரி மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யக்கூடாது. எங்களுக்கு மேலதிகாரியாக பணிபுரியும் அதிகாரிகள் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தேர்தலின் போது எந்த பாதிப்பும் ஏற்படாது. நீலகிரியில் சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகளை வேறு சட்டமன்ற தொகுதி அல்லது சிறப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். வேறு மாவட்டங்களுக்கு சென்றால், அந்த மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் கிராமங்கள் ஆகிய விவரங்கள் தெரியாது. இதனால் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது. ஆகவே, தாசில்தார்கள், தனி தாசில்தார்களை நீலகிரி மாவட்ட அளவில் இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஊராட்சி அலுவலர்கள் சங்க தலைவர் ராமன் கூறியதாவது:-
மலை மாவட்டமான நீலகிரியில் 31 ஊராட்சிகள் வனப்பகுதியை ஒட்டியும், பள்ளத்தாக்கு பகுதிகளிலும் உள்ளன. இந்த பகுதிகளில் தமிழக அரசின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் மற்றும் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் பணிகள் முடங்கும் நிலை ஏற்படுகிறது.
மே மாதம் தேர்தல் முடிந்த பின்னர் அதிகாரிகள் திரும்பி வரும் நேரத்தில் மழைக்காலம் தொடங்குவதால், பணிகள் பாதிக்கும். இதனால் பயனாளிகள் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும். எனவே, நீலகிரியில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். தாசில்தார்கள், தனி தாசில்தார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சான்றிதழ்கள், நலத்திட்டங்கள் வழங்குவது, ஊராட்சிகளில் சாலை பணிகள், குடிநீர் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.