மசினகுடி அருகே, தண்ணீர் தொட்டியில் சிக்கித்தவித்த 3 கரடிகள் - வனத்துறையினர் மீட்டனர்
மசினகுடி அருகே தனியாருக்கு சொந்தமான தண்ணீர் தொட்டியில் சிக்கித்தவித்த 3 கரடிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் பசுந்தீவனம் மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட பொக்காபுரம் வனப்பகுதியில் சுற்றித் திரியும் தாய் கரடியும் அதன் 2 குட்டிகளும் தண்ணீர் தேடி அருகே உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டுக்குள் வந்து உள்ளன.
அங்குள்ள பெரிய தண்ணீர் தொட்டியை கண்ட அந்த கரடிகள் தொட்டிக்குள் இறங்கி உள்ளன. ஆனால் அந்த தொட்டியில் தண்ணீர் இல்லாததால் தொட்டியை விட்டு வெளியே வர தாய் கரடியும் அதன் 2 குட்டிகளும் முயற்சி செய்தன.
தண்ணீர் தொட்டியின் சுற்றுச்சுவர் அதிக உயரம் இருந்ததால் அந்த கரடிகளால் வெளியே வர முடியவில்லை. அதனை தொடர்ந்து அந்த கரடிகள் சத்தமிட்டவாரே ஆக்ரோஷமாக வெளியே வர முயற்சி செய்து கொண்டிருந்தன. கரடிகளின் சத்தம் கேட்டு அங்கு சென்ற தனியார் எஸ்டேட் ஊழியர்கள் 3 கரடிகள் தொட்டியினுள் சிக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அது குறித்த தகவலை சிங்காரா வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரா வனச்சரகர் காந்தன், வனவர் பீட்டர் பாபு மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கரடிகள் தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியில் ஏறி வர வசதியாக ஏணி ஒன்றை தொட்டிக்குள் வைத்துவிட்டு வனத்துறை வாகனத்தில் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டனர். வேட்டை தடுப்பு காவலர்கள் 2 பேர் மட்டும் அருகில் இருந்த உயரமான மரத்தில் ஏறி கரடிகளை கண்காணித்தனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு தாய் கரடியும் அதன் 2 குட்டிகளும் அந்த ஏணியில் ஏறி தொட்டியில் இருந்து வெளியில் வந்தன. தொட்டியைவிட்டு வெளியில் வந்த தாய் கரடி தனது குட்டிகளை வனத்துறையினர் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களை தாக்க வனத்துறை வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. அப்போது வனத்துறை ஊழியர்கள் சத்தமிட்டதால் பீதி அடைந்த அந்த கரடி தனது 2 குட்டிகளையும் அழைத்து கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.