திருப்பத்தூர் காப்பகத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு சுய நினைவு திரும்பியது ஆந்திராவை சேர்ந்த குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வாணியம்பாடி பகுதியில் சுயநினைவின்றி கிடந்த மனநோயாளிக்கு திருப்பத்தூர் காப்பகத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் சுய நினைவு திரும்பியது. ஆந்திராவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ‘உதவும் உள்ளங்கள்’ சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியில் அழுக்கான ஆடைகளுடன் தனியாக பேசியவாறு சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள டாக்டரின் பரிசோதனைக்கு பிறகு அந்த மனநோயாளி திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு தொடர்ந்து வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சியின் வாயிலாக சுயநினைவு திரும்பியது. தனது பெயர் தாரகேஸ்வர் ராவ் என்றும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்தார். மற்ற விவரத்தை அவரால் கூறமுடியவில்லை.
அதைத் தொடர்ந்து காப்பக நிர்வாகி ரமேஷ் மற்றும் ஊழியர்கள் ஸ்ரீகாகுளம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு, தகவல் கொடுத்தனர். அதன் மூலம் அவரது குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டனர்.
பின்னர் அங்குள்ள போலீசார் விசாரணை நடத்தியதில், தாரகேஸ்வர் ராவ், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த கவுன்சிலர் ராமாராவ் - லட்சுமி நரசிம்மா தம்பதியினரின் மகன் என்றும், இவருக்கு 3 சகோதரிகள் இருப்பதும், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இவரது சகோதரிகள் விசாகபட்டினத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தாரகேஸ்வர் ராவுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதும் தெரியவந்தது. பின்னர் திருப்பத்தூர் காப்பகத்தில் தாரகேஸ்வர் ராவ் இருப்பதை குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரது சகோதரிகள் ஷைனி, கிருஷ்ணவேணி ஆகியோர் காப்பகத்திற்கு வந்தனர். தாரகேஸ்வர் ராவை கண்டதும் அவர்கள் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுதனர்.
அதன்பிறகு திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா முன்னிலையில், தாரகேஸ்வர் ராவ் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் உடனிருந்தார். தாரகேஸ்வர் ராவுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.