என்ஜினீயரிங் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.11½ லட்சம் மோசடி 3 பேர் கைது
என்ஜினீயரிங் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.11½ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை தகிசர் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி வில்லேபார்லேயில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர விரும்பினார். இதை அறிந்த மாணவியின் நண்பர் ராஜேஸ் (வயது22), அவரது நண்பர்களான ரோகன் பரப்(23), ராகேஷ் குப்தா (25) ஆகியோர் தங்களுக்கு அந்த கல்லூரியில் தெரிந்த பேராசிரியர் இருப்பதாகவும், அவர் மூலம் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறினர்.
இதை நம்பிய மாணவியை அவரது தந்தையுடன் ராஜேஸ் மற்றும் அவரது நண்பர்கள் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அப்போது, கல்லூரிக்கு வெளியே நின்ற ஒருவர் பேராசிரியர் என அறிமுகமானார்.
அப்போது, கல்லூரியில் ‘சீட்’ கிடைக்க அவர் கேட்ட ரூ.60 ஆயிரம் தொகையை மாணவி கொடுத்தார். இதற்காக அந்த பேராசிரியர் ஒரு ரசீதை கொடுத்தார். இதையடுத்து மாணவி கல்லூரியில் சேர அந்த ரசீதுடன் சென்றபோது, அது போலி என கூறி கல்லூரி நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஸ் மற்றும் அவரது 2 நண்பர்களை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மாணவியிடம் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதே பாணியில் பலரிடம் ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் வரை அவர்கள் மோசடி செய்திருந்தது தெரியவந்தது.
மேலும் கல்லூரி பேராசிரியர் போல் நடித்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.