ஒரத்தநாடு அருகே மனைவியை எரித்துக்கொல்ல முயன்ற தொழிலாளி கைது

ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-04 22:15 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சின்னையன்(வயது 43), கூலித்தொழிலாளி, இவரது மனைவி கண்ணகி(32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த சின்னையன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்ததில் இருந்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சின்னையன் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து கண்ணகி மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த கண்ணகியை அக்கம், பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இதுகுறித்து சின்னையன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வள்ளி மனைவி மீது மண்எண்ணைய்யை ஊற்றி கொலை செய்ய முயன்ற சின்னையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவியை கணவரே எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்