கணவர் 2-வது திருமணம் செய்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

2-வது திருமணம் செய்த கணவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்ணால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-04 22:45 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு கைக்குழந்தையுடன் 2 பெண்கள் மனு கொடுக்க வந்தனர். அதில் ஒரு பெண் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி, தீக்குளிக்க முயன் றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு, அவரை தடுத்து மீட்டனர். அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஆத்தூர் தாலுகா கும்மம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (வயது 28) என்பதும், 2-வது திருமணம் செய்த கணவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை, போலீசார் சமரசம் செய்து மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

அப்போது குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் கொடுத்த மனுவில், எனக்கும் திண்டுக் கல் நல்லாம்பட்டியை சேர்ந்த வெள்ளச்சாமி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதால், எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்த நிலையில் எனது கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டது தெரியவருகிறது. இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு, மகளிர் போலீசில் புகார் அளித்தேன். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்