1,884 பேர் தேர்வு அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படும்

1,884 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூடுதல் செயலாளர் கூறினார்.

Update: 2019-03-03 22:45 GMT
கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா) மூலம் புதிதாக கட்டிடம் கட்டவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் ரூ.286 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்காக இடத்தை தேர்வு செய்தல் உள்பட பல்வேறு பணிகள் நடந்து முடிந்து உள்ளன. ஆஸ்பத்திரியில் தற்போது உள்ள செவிலியர் விடுதி, கூட்டஅரங்கம், மகளிர் விடுதி, காசநோய் பிரிவு வரையுள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் நாகராஜன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் ஜைக்கா திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைய இருக்கும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர், ரத்த வங்கி, பிரசவ வார்டு, கண் சிகிச்சை மையம், குழந்தைகள் நல வார்டு, மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம், முன்கூட்டியே நோய் கண்டறிதல் பிரிவு உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, ஆஸ்பத்திரி டீன் அசோகன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, துணை இயக்குனர் பானுமதி, இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜைக்கா திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஜைக்கா திட்டத்தில் ஜப்பான் அரசு திட்டமிடுதலுக்கு தான் அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டில் முடிகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஜைக்கா திட்ட பணிகள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இருக் கிறது. தற்போது மருத்துவ தேர்வாணையம் மூலமாக 1,884 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ள னர். அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட்டு காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த 500 பேர் முதுகலை பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி முடிந்ததும் டாக்டர் களாக பணி அமர்த்தப்படுவார்கள். இதனால், வருகிற மே மாதம் முதல் டாக்டர்கள் பணியிடம் காலி இல்லாத நிலை ஏற்படும். மேலும், அரசு ஆஸ்பத்திரிகளில் 2,345 நர்சுகள் பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்