சாத்தூரில் ‘பார்’ வாசலில் பயங்கரம்; கண்ணில் மிளகாய் பொடி தூவி வாலிபரை வாளால் வெட்டினர் அண்ணன்- தம்பிகளுக்கு வலைவீச்சு

கண்ணில் மிளகாய் பொடி தூவி வாலிபரை வாளால் சரமாரியாக வெட்டிய அண்ணன்-தம்பிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-03-03 22:00 GMT
சாத்தூர்,

சாத்தூர் படந்தாலை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் முத்துபாண்டி(வயது35). இவர் கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது ஆட்டோவை தீவைத்து எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்.

அவர் நேற்று உறவினர் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள அண்ணாநகர் வந்தார். பின்னர் மாலையில் அங்குள்ள மதுபானகடையில் மது வாங்கி பாரில் அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது செந்தில்குமார் தனது சகோதரர்கள் மோகன், அஜீத் ஆகியோருடன் அங்கு மது அருந்திக்கொண்டிருந்தார். முன்விரோதம் இருந்த நிலையில் அவர்களுக்குள் அங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முத்துபாண்டி பாரில் இருந்து வெளியே வந்துள்ளார். வாசல் பகுதியில் அவர் வந்த போது செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேரும் அவரை பின்தொடர்ந்து வந்து திடீரென்று கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். இதில் நிலைகுலைந்து முத்துபாண்டிகீழே விழுந்தார். உடனே அவரை வாளால் வயிற்றில் குத்தியதோடு சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துபாண்டியை சாத்தூர் டவுன் போலீசார் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக செந்தில்குமார் உள்பட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்