அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் வலுப்படுத்த வேண்டும் அன்வர்ராஜா எம்.பி.பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் வலுத்தப்படுத்த வேண்டும் என்று அன்வர்ராஜா எம்.பி. பேசினார்.

Update: 2019-03-03 23:00 GMT

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் கீழநாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தேவர் நகர் சிட்கோ வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்ட நிதியின் மூலம் ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் நவீன வசதிகளுடன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நாகாச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் சொக்கன் வரவேற்று பேசினார். மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தங்கமரைக்காயர், முன்னாள் ஊராட்சி தலைவர் உ.ராமச்சந்திரன், ஆற்றங்கரை ஊராட்சி கழக செயலாளர் சுப்பையா, அ.தி.மு.க. நிர்வாகி ஆர்.வி. என்ற விசுவநாதன், என்மனங்கொண்டான் அப்துல்லா, உச்சிப்புளி ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், உச்சிப்புளி ஊராட்சி கழக செயலாளர் கார்மேகம், புலவர் சித்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து பேசியதாவது:– நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சிட்கோ வளாகத்தில் தேவர் நகரில் சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் செலவில் நவீன சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நாகாச்சி அம்மன் கோவில் அருகில் ரூ.10 லட்சம் செலவில் அலங்கார கற்கள் தளம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மண்டபம் யூனியனில் எம்.பி. நிதியின் மூலம் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டு அதன்மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் வலுப்படுத்த வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நீலமேகம், அம்மன் கோவில் பூசாரி கிருஷ்ணன், கண்ணன், உலகநாதன், சுப்பிரமணி, ஆக்கிடாவலசை மலைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செம்படையார்குளம் ஊராட்சியில் ரூ.8 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அன்வர்ராஜா எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஊராட்சி செயலாளர் சுந்தரம், செல்வம், வட்டாண்வலசை கண்ணுச்சாமி, மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்