ஒகேனக்கல் வனப்பகுதியில் கடும் வறட்சி: தொட்டிகளில் தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கூட்டம்

ஒகேனக்கல் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தொட்டிகளில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம், கூட்டமாக வருகின்றன.

Update: 2019-03-03 22:15 GMT
பென்னாகரம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர் ஒகேனக்கல், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள வயல்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக யானைகள் கூட்டம், கூட்டமாக வெளியேறி சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறை சார்பில் தாசம்பட்டி, பேவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆழ்துளை குழாய் அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து தொட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 15-க்கும் மேற்பட்ட யானைகள் தொட்டியில் தண்ணீர் குடித்து சென்றன.

பின்னர் அந்த யானைகள் தர்மபுரி-ஒகேனக்கல் சாலையை கடந்து சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தினர். யானைகள் சாலையை கடந்து சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர். ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்