பள்ளிகொண்டா அருகே கார் மீது சொகுசு பஸ் மோதல்; வாலிபர் பலி 9 பேர் படுகாயம்
பள்ளிகொண்டா அருகே கார் மீது சொகுசு பஸ் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
அணைக்கட்டு,
பெங்களூரு ஈரோஅல்லி முனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 24). இவரும், அவரது நண்பர்கள் 4 பேரும் மேல்மலையனூருக்கு செல்ல பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை அனில்குமார் ஓட்டினார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் பள்ளிகொண்டாவை அடுத்து கந்தனேரி கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சொகுசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இந்த விபத்தில் அனில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணம் செய்த மல்லிகாஅர்ஜூன் (24), அசோக் (23), ரகு (29), விணை (23) மற்றும் பஸ்சில் பயணம் செய்த மாதேஷ் (48), சங்கபிள்ளை (40), தனசேகரன் (32), பஸ் டிரைவர் கோட்டீஸ்வரன் (24), மாற்று டிரைவர் பூபாலன் (33) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் ராமசந்திரன், செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 9 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அனில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரியை சேர்ந்தவர் அசோக்குமார் (58). இவர், தனது குடும்பத்துடன் காரில் ஏலகிரிக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து குடும்பத்துடன் ஊருக்கு புறப்பட்டார். கந்தனேரி கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
இந்த விபத்தில் அசோக்குமாரின் பேத்தி சத்யா (3) படுகாயம் அடைந்தாள். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.