பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் ‘மோடிக்கான ஓட்டமும், நடையும்’ மாரத்தான் போட்டி

பா.ஜ.க. ஆட்சியில் மோடி நிறைவேற்றிய 5 ஆண்டு சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற நோக்கத்திலும் ‘மோடிக்கான ஓட்டமும், நடையும்’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகரில் நேற்று காலை நடைபெற்றது.

Update: 2019-03-03 22:45 GMT
சென்னை,

போட்டியை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பி.டி.அரசக்குமார், மாவட்ட செயலாளர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் தொழில்பிரிவு மாநில செயலாளர் துரை கந்தசாமி, அறிவுசார் பிரிவு மாநில செயலாளர் கே.பி.விசுவநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ‘ஸ்கேட்டிங்’ விளையாட்டு மைதானத்துக்கு எதிரே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, 4-வது மெயின் ரோடு மற்றும் 3, 2, 7, 6 ஆகிய நிழற்சாலைகள் வழியாக 3 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

இதில் பா.ஜ.க. ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையிலும், மோடி நிறைவேற்றிய பல சாதனை திட்டங்களையும் கையில் பதாகைகளாக ஏந்தி வலம் வந்தனர். மேலும் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற நோக்கில், போட்டியில் கலந்துகொண்டவர்களில் பலர் ‘நமோ எகெயின்’ என்ற ‘டி-சர்ட்’ அணிந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்