கிராமத்தில் உருவாகும் சர்வதேச வீராங்கனைகள்
அரியானா மாநிலத்திலுள்ள அலக்புரா கிராமம், கால்பந்து வீராங்கனைகளை உருவாக்கும் கிராமமாக திகழ்கிறது. அந்த கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் கால்பந்து பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார். தற்போது அந்த கிராமத்தில் 300 கால்பந்து வீராங்கனைகள் இருக்கிறார்கள். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இந்த கிராமத்து வீராங்கனைகளில் ஒருவராவது இடம்பிடித்துவிடுகிறார்.
இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஐந்து வயதிலேயே கால்பந்து விளையாட தொடங்கி விடுகிறார்கள். பெண் குழந்தைகளிடையே கால்பந்து ஆர்வத்தை விதைத்தவர் சோனிகா பிஜாரியா.
‘‘சர்வதேச அளவில் சுப்ரோ கோப்பை போட்டி 1960-ம் ஆண்டு முதல் நடந்து கொண்டிருக்கிறது. 2012-ம் ஆண்டில்தான் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அலக்புரா கிராமத்து பெண்கள் கடுமையாக போராடி முதல் போட்டியிலேயே அரை இறுதிக்குள் நுழைந்தார்கள். அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்கள். ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை. சோர்ந்து போகாமல் அடுத்த ஆண்டு நடந்த போட்டியில் கோப்பையை வென்றார்கள். இன்றுவரை தொடர்ந்து மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள்.’’ என்கிறார் சோனிகா பிஜாரியா.
கடந்த ஆண்டு இந்த கிராமத்து வீராங்கனைகள் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தங்கள் அணியை பதிவு செய்திருக்கிறார்கள். அணியின் செலவீனங்களுக்கு தேவையான பணத்தை தங்களுக்குள்ளாகவே திரட்டிக்கொள்கிறார்கள். பெற்றோரும் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் தங்கள் மகள்கள் கால்பந்து விளையாடியபோது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். படிப்பு பாழாகிவிடும் என்றும் கருதினார்கள். அதற்கு மாறாக கால்பந்து விளையாட்டுக்கு மத்தியில் அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். அரியானா மாநில அரசும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சலுகைகளும், பண உதவியும் வழங்குகிறது.
இந்த கிராமத்து வீராங்கனைகளான ரித்து, நிஷா, தீபிகா ஆகியோர் மும்பை இந்திய பெண்கள் லீக் அணியில் விளையாடுகிறார்கள். மேலும் மலேசியா, வங்காள தேசம், கொரியாவில் நடந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்கள்.