சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 37 பேர் இடமாற்றம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு
சேலத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 37 பேர் நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளை மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 47 வட்டார வளர்ச்சி அலுவலர் களில் 37 பேர் வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நாமக்கல் மாவட்டத்திற்கும், 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை ஈரோடு மாவட்டத்திற்கும், 7 பேர் கரூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் பணி இடமாறுதல் உத்தரவு ஆணைகளை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யாரும் இதுவரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.
வழக்கமாக தேர்தல் நடைபெறும் தொகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சொந்த தொகுதியாக இருந்தால் அவர்களை வேறு தொகுதிக்கு மாற்றப்படுவார்கள். அப்படி இல்லையென்றால் அந்த மாவட்டத்திற்குள்ளேயே வேறு பகுதிக்கு மாற்றப்படுவதுண்டு. ஆனால் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 37 பேரை சேலத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்திருப்பது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசு சார்பில் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கும் பணிகளை புறக்கணிப்பது என்றும், நாளை (திங்கட் கிழமை) முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்திருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.