கோவையில் குத்து சண்டை அரங்கம் திறப்பு வீரர்கள் மகிழ்ச்சி

கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே புதிய குத்து சண்டை அரங்கம் நேற்று திறக்கப்பட்டது.

Update: 2019-03-02 22:15 GMT
கோவை, 

கோவையில் குத்து சண்டை வீரர்கள் பயிற்சி பெறவும், போட்டிகள் நடத்தவும் தனி விளையாட்டு அரங்கம் இல்லை. இதன்காரணமாக கோவை வீரர்கள் தேசிய அளவிலான குத்து சண்டையில் பதக்கங்கள் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குத்து சண்டை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சார்பில் குத்து சண்டைக்கு என்று தனி அரங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் ரூ.15 லட்சம் செலவில் குத்து சண்டை அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். குத்து சண்டை பயிற்சியாளர்கள் மயில்சாமி, நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த அரங்கை சமூக ஆர்வலர் அன்பரசன் திறந்து வைத்தார். இதில் தடகள பயிற்சியாளர்கள் சீனிவாசன், நிஜாமுதீன், குத்து சண்டை வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து வீரர்கள் கூறிய தாவது:-

குத்து சண்டைக்கான மேடை மற்றும் அரங்கம் இல்லாததால் எங்களால் சரியாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. மேலும் போட்டிகளும் நடத்த முடியாத நிலை இருந்தது. தற்போது முழுவதும் உள் விளையாட்டு அரங்கமாக அமைக்கப்பட்டு உள்ளதால் மழை, வெயில் என அனைத்து காலநிலைகளிலும் எங்களால் பயிற்சி மேற்கொள்ள முடியும். மேலும் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை கோவையில் நடத்தவும் முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதியதாக திறக்கப்பட்ட அரங்கத்தில் உள்ள குத்து சண்டை மேடையில் வீரர்கள், வீராங்கனைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயிற்சி மேற்கொண்டனர். இந்த அரங்கில் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக உடை மாற்றும் அறை, கழிப்பறை, பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்க தனிப்பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பயிற்சிக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்