இஸ்திரி கடையில் இருந்தவருக்கு கத்திக்குத்து நைஜீரிய வாலிபருக்கு 1½ ஆண்டு சிறை நாடு கடத்தவும் கோர்ட்டு உத்தரவு

இஸ்திரி கடையில் இருந்தவரை கத்தியால் குத்திய நைஜீரிய வாலிபருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அவரை நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

Update: 2019-03-02 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு ஹெக்டே நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருப்பவர் இப்ராகிம் அப்துல் (வயது 28). இவர் நைஜீரியாவை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படிக்க பெங்களூரு வந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு கொத்தனூர் அருகே உள்ள இஸ்திரி கடைக்கு சென்றார். அங்கு லட்சுமண் என்பவர் இருந்தார்.அவரிடம், ‘இந்தியர்கள் சரியில்லை’ என்றார். இதை கேட்ட லட்சுமண் ‘எதற்கு அப்படி கூறுகிறீர்கள்’ என்று கேட்டார்.

இந்த வேளையில் ஆத்திரமடைந்த இப்ராகிம் அப்துல் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து லட்சுமணை குத்திவிட்டு ஓடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் லட்சுமணை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் இப்ராகிம் அப்துலையும் அவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராகிம் அப்துலை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து, கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, லட்சுமணை கத்தியால் குத்திய இப்ராகிம் அப்துலுக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

மேலும், சிறை வாசத்துக்கு பின் இப்ராகிம் அப்துலை நாடு கடத்த அரசும், தூதரக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகள்