உரக்கிடங்கு பிரச்சினை: விசாரணை கமிஷன் குழுவினர் ஆய்வு

கரூர் அருகே உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டதன் பேரில், மதுரை ஐகோர்ட்டால் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-03-02 23:00 GMT
கரூர்,

கரூர் நகரில் சேகரமாகும் குப்பை கழிவுகள், நகராட்சி துப்புரவு பணியாளர்களால் அகற்றப்பட்டு வாங்கல் ரோட்டிலுள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்து இருப்பதால், சேகரமாகும் குப்பைகளின் அளவு முன்பை விட குறைந்திருக்கிறது. மேலும் உணவு கழிவுகள் உள்பட மக்கும் தன்மையுடைய குப்பைகள் தான் பெருமளவு பெறப்படுகின்றன. இதனால் ஆங்காங்கே சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து மக்கும் குப்பைகளை அரைத்து கூழாக்கி விவசாய பணிகளுக்கான உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக உரக்கிடங்கு அமைப்பதற்காக குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில், கரூர் வடக்குகாந்திகிராமம் முல்லை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நகராட்சி உரக்கிடங்கு அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதையறிந்த அப்பகுதி மக்கள், இங்கு உரக்கிடங்கு அமைத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் ஒதுக்குப்புறமாக தான் குப்பைகளை கொட்டி உரம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு கோர்ட்டு உத்தரவிட்டதாக கூறி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் அப்பகுதி மக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, விசாரணை கமிஷன் குழுவினரை நியமித்து இது தொடர்பாக விசாரித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தர விட்டார். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட அக்குழுவினர் நேற்று முல்லை நகருக்கு வந்து உரக்கிடங்கு பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்து விசாரித்து குறிப்பெடுத்து கொண்டனர். மேலும் மக்களிடமும் கருத்து கேட்டனர். அப்போது அப்பகுதியினர்அக்குழுவினரிடம், ஏற்கனவே இப்பகுதியில் வழிப்பறி, குடிமகன்கள் தொல்லை உள்ளது. உரக்கிடங்கு அமைந்தால், பல்வேறு சமூக விரோத செயல்கள் எளிதாக நடக்கும், எனவே இங்கு உரக்கிடங்கு அமைக்கக்கூடாது என்றனர். இதையடுத்து மாற்று இடம் தேர்வு பணி நடைபெற்றது. அப்போது வடக்கு காந்திகிராமம் சுடுகாடு, அரசுகாலனி உள்ளிட்ட பகுதிகளை அக்குழுவினர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்