மகளிர் சுயஉதவி குழு கடனுக்கு 4 சதவீதம் வட்டி தள்ளுபடி நாராயணசாமி அறிவிப்பு
மகளிர் சுய உதவி குழு கடன்களுக்கான 4 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்–அமைச்சர் நாராயணசாமி இறுதியில் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். சட்டசபையில் அவர் பேசியதாவது:–
புதுச்சேரி ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 2 ஆயிரத்து 533 சுயஉதவி குழுக்கள் மற்றும் 98 பஞ்சாயத்து மகளிர் கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மகளிர் குழுக்களின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.15 கோடி சேமிக்கப்படுகிறது. மேலும் இக்குழுக்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.30 கோடி வங்கிகளின் கடன் பெறுகிறார்கள். சுய உதவி குழுக்கள் வங்கிகளின் மூலம் பெறும் கடனுக்கு அவர்கள் கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்துபவர்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையில் 4 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
அனைத்து 98 கிராம பஞ்சாயத்து மகளிர் கூட்டமைப்புகளுக்கும் தலா ரூ.1 லட்சம் சுழல் நிதியாக வழங்கப்படும். மேலும் இந்த மகளிர் கூட்டமைப்புகள் வங்கிகளில் பெரும் கடனுக்கு 4 சதவீதம் வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இதுபோன்ற திட்டம் நகரப்பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.