கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏரிக்கரையில் மூட்டை, மூட்டையாக கிடந்த பழைய 500 ரூபாய் கட்டுகள் போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரியில் சாலையோர ஏரிக்கரையில் பழைய 500 ரூபாய் கட்டுகள் மூட்டை, மூட்டை யாக கிடந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-02 21:45 GMT
கிருஷ்ணகிரி, 

நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் வங்கியில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறு ரூபாய் நோட்டுகள் தரப்பட்டன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகரில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் பெங்களூரு செல்லும் சாலையில் புதூர் ஏரிக்கரை அருகில் நேற்று செல்லாத பழைய 500 ரூபாய் கட்டுகள் மூட்டை, மூட்டையாக கிடந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அருகில் 500 ரூபாய் கட்டுகளுடன் மூட்டைகள் சில தீயில் எரிந்து கொண்டிருந்தன. அதை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

செல்லாத 500 ரூபாய் கட்டுகளை மூட்டையாக கொண்டு வந்த கும்பல் அதை விறகு போட்டு, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதில் சில கட்டுகள் மட்டும் எரியாமல் சாலையோரமாக அப்படியே கிடந்துள்ளன. செல்லாத 500 ரூபாய் நோட்டுகளை போட்டு சென்ற மர்ம கும்பல் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்