வேலூர் தொலைதொடர்பு மாவட்டத்தில் 35 இடங்களில் ‘3 ஜி’ டவர்கள் அமைக்கப்பட உள்ளது பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பேட்டி
வேலூர் தொலைதொடர்பு மாவட்டத்தில் 35 இடங்களில் ‘3 ஜி’ டவர்கள் அமைக்கப்பட உள்ளது என பி.எஸ்.என்.எல்.பொது மேலாளர் வெங்கட்ராமன் கூறினார்.
ஆம்பூர்,
ஆம்பூர் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலையத்தில் அதிவேக ‘பாரத் பைபர்’ இணைப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி, வாடிக்கையாளர்களுக்கு மோடம் வசதியை வழங்கினார். மாவட்ட துணை பொது மேலாளர்கள் வேலாயுதம், ஆறுமுகம், கீதாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறியாளர் பெரியசாமி வரவேற்றார். முடிவில் துணை கோட்ட பொறியாளர் ஆல்பர்ட்சிங் நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட பொதுமேலாளர் வெங்கட்ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் தொலைதொடர்பு மாவட்டத்தில் அதிவேக ‘பாரத் பைபர் கேபிள் இன்டர்நெட்’ இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,500 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 900 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.577-ல் தொடங்கி ரூ.1,927 வரை பல்வேறு திட்டங்கள் உள்ளது. ‘பாரத் பைபர்’ கேபிள் இணைப்பு திட்டத்தில் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மார்ச் மாதம் (இம்மாதம்) முழுவதும் ரூ.670-க்கான ‘5 ஜிபி’ திட்டம் ‘பிராட்பேண்ட்’ இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மோடம் வசதி இருப்பவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். மோடம் இல்லாதவர்கள் பி.எஸ்.என்.எல், நிறுவனத்திடம் மாத வாடகைக்கு மோடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
வேலூர் தொலைதொடர்பு மாவட்டத்தில் 35 இடங்களில் ‘3 ஜி’ டவர்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் 15 டவர்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பி.எஸ்.என்.எல். டவர்களே இல்லாத பகுதிகளாக 115 இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் புதிதாக டவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.