பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது, மாவட்டத்தில் 30 ஆயிரத்து 630 பேர் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதனை கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 630 மாணவ, மாணவிகள் எழுதினர்.
கடலூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. இத்தேர்வுக்காக கடலூர் மாவட்டத்தில் 104 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. 218 அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 30 ஆயிரத்து 630 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
தேர்வை கண்காணிப்பதற்காக மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த பறக்கும் படையினர் தேர்வுமையங்களுக்கு சென்று கண்காணித்தனர். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன், கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் ஏற்கனவே அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுத போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று(அதாவது நேற்று) முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 630 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக 294 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் முழு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 19-ந்தேதியுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைகிறது. இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனிசாமி உடன் இருந்தார்.
இதில் கடலூர் புனித வளனார் பள்ளியில் பார்வை குறைபாடு உடைய ஒரு மாணவர் ஆசிரியை உதவியுடன் தேர்வை எழுதினார்.