நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு, கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-01 23:15 GMT
விருத்தாசலம்,

கருவேப்பிலங்குறிச்சி அருகே சாத்துக்கூடல் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அய்யனார் கோவில் அருகில் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் வழக்கமாக அமைக்கப்பட்ட இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தனிநபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்துக்கூடல் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து விருத்தாசலம் தாசில்தார், கிராம மக்களையும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தனிநபரையும் தாலுகா அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தார், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அரசு இடத்தில் அமைக்கலாம் என்று தெரிவித்தார். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் சாத்துக்கூடல் கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யக்கூடாது, அய்யனார் கோவில் அருகிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்