திருத்துறைப்பூண்டியில், 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-01 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,


விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்க இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்களும் மற்றும் காவல்துறையை சார்ந்தவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாகவும் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன், வட்ட செயலாளர் ஜோதிபாசு, அரசு ஊழியர் சங்க முன்னாள் வட்ட பொருளாளர் மலர்கொடி, வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட பொருளாளர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலங்கைமான் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டமும், காத்திருப்பு போராட்டமும் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் வட்ட செயலாளர் விக்னேஸ்வரன், மாவட்ட இணைச்செயலாளர் ரவி, மத்திய செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், அரசு ஊழியர் சங்கத்தின் வலங்கைமான் வட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்