இரு நாடுகள் இடையே போர் பதற்றம்: பிரதமர் மோடியின் தந்திரத்தால் பாகிஸ்தானின் சதி அம்பலம் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு

இருநாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் தந்திரத்தால் பாகிஸ்தானின் சதி அம்பலமாகியுள்ளது என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2019-03-01 23:30 GMT
பெங்களூரு,

இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாதிகள் மீதான விமானப்படை தாக்குதல், கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற உதவும்” என்றார். எடியூரப்பாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தானும் இதை மேற்ேகாள் காட்டி மத்திய அரசை குறை சொன்னது.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா சார்பில் ‘சக்திகேந்திர பிரமுக்ஸ்’ என்ற பெயரில் நிர்வாகிகள் கருத்தரங்கு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலந்துகொண்டு பேசியதாவது:-

காஷ்மீரில் புலவாமாவில் நடந்த தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். அதற்கு இந்தியா, பழி தீர்த்துக் கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் மரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலமே அடங்கிவிட்டது. பிரதமர் மோடியின் தந்திரத்தால் பாகிஸ்தானின் சதி அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றுள்ளன. உலக அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளின் வரிசையில் இந்தியா நிற்க, மோடியே காரணம். அவரை மீண்டும் ஒருமுறை பிரதமராக்க வேண்டும்.

சுஷ்மா சுவராஜ் சீனாவுக்கு சென்றார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடையாது என்று அந்நாடு அறிவித்துவிட்டது. சீனாவின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. ராணுவத்துக்கு முதல் முறையாக முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், இது சாத்தியமானது. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நமது விமானப்படை வீரர் அபிநந்தன் இந்தியாவுக்கு திரும்புகிறார்.

பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தலைவணங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு எந்த தகவல்களையும் கொடுக்காமல், தனது தேசபக்தியுடனும், ஒழுக்கம் மிகுந்த சிப்பாயாகவும் அபிநத்தன் இருக்கிறார்.

அவரை பற்றி நினைக்கும் போது நமக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 வாரங்கள் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 300 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி எதிர்பார்க்கிறார். அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் கட்சி நிர்வாகிகள் கடுமையாக பாடுபட வேண்டும்.

நிர்வாகிகள் அனைவரும் முழு நேர கட்சி பணியாற்ற வேண்டும். தோ்தலின்போது, தொண்டர்கள் பூத் அளவில் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்.

இந்தியாவை அதிக அதிகாரம் கொண்ட (சூப்பர்பவர்) நாடாக பார்க்க மோடி விரும்புகிறார். அதனால் நமது கட்சியினர் தீவிரமாக உழைத்து, மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஒரு நாள் கூட ஓய்வு எடுத்தது கிடையாது.

கர்நாடகத்தில் பா.ஜனதா 22-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெங்களூரு மண்டலத்தில் உள்ள 7 தொகுதிகளும் நமக்கு கிடைக்க வேண்டும்.

அதனால் நமது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் நேரத்தை கட்சி பணிக்கு ஒதுக்கி பணியாற்ற வேண்டும். பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு புறநகர், துமகூரு, சிக்பள்ளாப்பூர் மற்றும் கோலார் ஆகிய 7 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி மற்றும் அந்த 7 நாடாளுமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்