நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை மந்திரி யு.டி.காதர் சொல்கிறார்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும். தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை வேட்பாளர்கள் யாரையும் இறுதி செய்யவில்லை. வேட்பாளர்கள் தேர்வு விஷயத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம்.
காங்கிரசின் மூத்த தலைவர்களான ஜனார்த்தன பூஜாரி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், வீரப்ப மொய்லி ஆகியோர் தங்களது சமூகம், ஜாதி இப்படி எதையும் பார்க்காமல் மக்களுக்காக சேவையாற்றி உள்ளனர். அவர்கள்தான் எங்களுடைய முன்மாதிரி ஆவார்கள். தற்போது சோமேஸ்வர், முக்கச்சேரி, உச்சிலா, தாளப்பாடி ஆகிய கடற்கரையோர பகுதிகளில் மதில் சுவர்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. அது விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.