பிளஸ்-2 தேர்வு தொடங்கியது: 10,761 மாணவ-மாணவிகள் எழுதினர் 622 பேர் வரவில்லை
கரூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வினை 10,761 பேர் எழுதினர். 622 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கரூர்,
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்வுக்காக 40 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்து, படித்த பாடங்களை கடைசியாக ஒரு முறை திருப்பி பார்த்து கொண்டிருந்தனர்.
பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை பரிசாக வழங்கி வாழ்த்தியதை காண முடிந்தது. இந்த ஆண்டு முதல் தமிழ் பாடத்திற்கு ஒரே தாள் என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். காலை 9.30 மணியளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
அப்போது, தேர்வறையில் துண்டு சீட்டு வைத்திருத்தல், செல்போன் பயன்படுத்துதல், வினாத்தாள்-விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் படிப்பதற்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் தேர்வறையில் கடைபிடிக்க வேண்டியவை உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்வு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரியாக காலை 10 மணியளவில் தேர்வறைக்குள் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள், விடைத்தாள் வழங்கப்பட்டது. சுமார் 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 10.15 மணியளவில் ஆர்வத்துடன் மாணவர்கள் தேர்வெழுத ஆரம்பித்தனர். தேர்வு தொடங்கியதும், மையத்தினுள்ளே வெளிநபர்கள் யாரும் புகுந்து விடாத வகையில், நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கரூர் காந்திகிராமம் தெரசா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று நேரில் பார்வையிட்டு, தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பன உள்ளிட்டவை குறித்து தேர்வ மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். க.பரமத்தி, அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல் உள்பட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்தனர். கரூர் மாவட்டத்தில் 5,472 மாணவர்கள், 5,911 மாணவிகள் என மொத்தம் 11,383 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 622 பேர் தேர்வு எழுத வராததால், 10,761 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வில் முறைகேடுகளை களைவதற்காக 91 பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வறையை சுற்றி வந்து, துண்டு சீட்டு வைத்து எழுதுதல் உள்ளிட்டவற்றில் யாரேனும் ஈடுபடுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்தனர். தேர்வு பணிக்காக கரூர் மாவட்டத்தில் மொத்தம் 934 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்வானது சரியாக 12.45 மணியளவில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து விடைத்தாளை தேர்வறை கண்காணிப்பாளரிடம் மாணவர்கள் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர். பின்னர் தேர்வில் தங்களுக்கு எழுந்த சந்தேகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
மேலும் உரைநடை, இலக்கணம், செய்யுள்பகுதி என்பன உள்ளிட்டவற்றை சேர்த்து 90 மதிப்பெண்களுக்கு ஒரே தேர்வாக நடத்தப்பட்டதால் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வெழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்துசெல்ல போதிய பஸ்வசதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
18 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் சிலர் ஆசிரிய, ஆசிரியைகள் உதவியுடன் எழுதினர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிலருக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அவர்களுக்கு 1.45 மணிக்கு தேர்வு நிறைவடைந்தது.