அ.தி.மு.க.-பா.ஜ.க. ஊழல் கூட்டணி சஞ்சய்தத் பேட்டி

அ.தி.மு.க.-பா.ஜ.க. ஊழல் கூட்டணி என கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.

Update: 2019-03-01 23:00 GMT
கரூர், 

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த கூட்டம் கரூர்-கோவை ரோட்டிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார். இதில் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், முன்னாள் எம்.எல்.ஏ.வும்-மாவட்ட பொறுப்பாளருமான ஆர்.எம்.பழனிசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு, நகர தலைவர் சவுந்தரராஜன், வட்டார தலைவர் ராஜ்குமார் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய்தத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக ராணுவ வீரர் பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்படுவது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டபோதும் அவரது வீரத்தையும், தைரியத்தையும் காண்பித்தார். இந்தியாவில் உள்ள அனைவரின் பிரார்த்தனையும் நிறைவேறியது. இந்த சூழ்நிலையில் ஒரு சில பா.ஜ.க. நிர்வாகிகள் வீரத்தின் தியாகத்தை அரசியலாக்குவது வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி என்பது ஒரு சம்பிரதாய திருமணம் மாதிரி. மோடியின் ரிமோட் கண்ட்ரோல் கட்டுப்பாட்டின் கீழ் தான் அ.தி.மு.க. ஆட்சியை நடத்தி வருவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. அமைத்துள்ள கூட்டணி ஊழலையும், லஞ்சத்தையும் பாதுகாப்பதற்காகவும், அவற்றை ஆதரிக்கும் கூட்டணி. ஆனால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அவ்வாறு இல்லை. இந்திராகாந்தியும், கருணாநிதியும் இருந்த காலம் முதல் இந்த கூட்டணி இருக்கிறது. எங்களது கூட்டணிக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. இந்த கூட்டணி மக்கள் நலனுக்கான கூட்டணி.

நமது ராணுவவீரர் பாகிஸ்தானில் சிக்கி இருந்தபோது அந்நாட்டின் அதிபர் இம்ரான்கான் என்ன சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் பாகிஸ்தானை நம்பமாட்டோம். நாங்கள் எப்போதும் இந்திய வீரர்கள் பக்கம்தான் இருப்போம். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் மூலம் கர்நாடகாவில் 24 தொகுதிகளை கைப்பற்றி விடுவோம் என கூறியிருப்பது முகம்சுளிக்கும் வகையில் தான் இருக்கிறது. இது வெட்ககேடானது. இது தொடர்பாக அமித்ஷாவும், மோடியும் கண்டனம் தெரிவிக்காமல் ஆதரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம், போர் தாக்குதல் அனுதாபம் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்