கிராமங்களில் நள்ளிரவில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்திய கும்பல் - 5 பேருக்கு கத்திகுத்து, வீடுகள் சூறை
கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்து மர்ம ஆசாமிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். 3 வீடுகள் சூறையாடப்பட்டன. கத்தியால் குத்தப்பட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் - காஞ்சீபுரம் மாவட்ட எல்லையில் மரக்காணம் அருகே கானிமேடு, புதுப்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி ஆடு மற்றும் மாடுகள் திருட்டு போனது. இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும், கானிமேடு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்துவந்தது.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கானிமேடு, புதுப்பேட்டை கிராமங்களில் 15 பேருக்கும் மேற்பட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் புகுந்தது. அங்கு வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் களை திடீரென அவர்கள் அடித்து நொறுக்கினர்.
சத்தம்கேட்டு எழுந்த கிராம மக்கள், மர்ம ஆசாமிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தடுக்க முயன்ற போது மேலும் ஆத்திரமடைந்து இரும்பு குழாய், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் அந்த ஆசாமிகள் தாக்குதலில் ஈடுபட்டுனர். 3 வீடுகளின் ஜன்னல் கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி, சூறையாடினர். வீடுகளின் முன்பு கட்டி இருந்த ஆடு, மாடுகளையும் விட்டு வைக்காமல் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் ஒரு பசுங்கன்று பரிதாபமாக செத்தது.
கத்தியால் குத்தப்பட்டதிலும், அரிவாளால் வெட்டியதிலும் கானிமேடு கிராமத்தை சேர்ந்த வீராசாமி (வயது 37), பார்த்திபன் (27), சீனு (35), சண்முகம் (45), மாரியப்பன் (30) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் அவர்களுக்கு மண்டை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் கத்தி, அரிவாள் வெட்டுகள் விழுந்தன. மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கானிமேடு கிராமத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி, மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.