சாணார்பட்டி ஒன்றியத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி
சாணார்பட்டி ஒன்றியத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியத்தில் வேம்பார்பட்டி, அய்யாபட்டி, செங்குறிச்சி, தவசிமடை, அஞ்சுகுளிப்பட்டி, கணவாய்பட்டி, மணியக்காரன்பட்டி, ஆவிளிபட்டி, கோபால்பட்டி, கொசவபட்டி, மருனூத்து, வீரசின்னம்பட்டி, வி.எஸ்.கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக தென்னை மரங்கள் திகழ்கின்றன. கடும் வறட்சி நிலவும் சூழலிலும், ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர். மேலும் தென்னை மரங்களுக்கு உரமிடுகின்றனர். இதுபோன்ற செலவுகள் வருடந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.10-க்கு விற்பனையானது. தற்போது அந்த தேங்காய் விலை ரூ.7 ஆக குறைந்துள்ளது.
இந்த விலை வீழ்ச்சிக்கான காரணம் குறித்து தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:-
சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் இருந்து டெல்லி, குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாதத்துக்கு 50 லாரிகளில் தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மாதம் வரை தேங்காய்களுக்கு கடும் கிராக்கி இருந்தது. ஆனால் தற்போது வடமாநிலங்களுக்கு 10 லாரிகளில் மட்டுமே தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
வடமாநிலங்களில் தற்போது கடும்குளிர் நிலவுவதால் தேங்காய் தேவை குறைந்துள்ளது. இதேபோல் ஆந்திர மாநிலத்தில் தேங்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதும் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஆகும். விலை வீழ்ச்சி காரணமாக தென்னை விவசாயிகள், வியாபாரிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
ஏற்கனவே வறட்சியால் 40 சதவீத மரங்கள் பட்டுப்போய்விட்டன. இந்த சூழலில் அதிக செலவு செய்து தென்னை மரங்களை பராமரிக்கும் விவசாயிகள், வேறு தொழிலுக்கு மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.