நகராட்சி வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-01 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சேரும் குப்பைகள் நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு அவை மொத்தமாக வாகனங்களில் ஏற்றப்பட்டு விழுப்புரம் முத்தாம்பாளையம் முருகன் கோவில் எதிரே ஓம்சக்தி நகர் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

இங்குள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அவை மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பதாக சொல்லி பிரிக்காமலேயே அவ்வப்போது தீவைத்து எரித்து விடுவதாக தெரிகிறது.

இதனால் ஏற்படும் நச்சுப்புகையினால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை குப்பைகளை ஏற்றிக்கொண்டு 2 வாகனங்கள் ஓம்சக்தி நகர் பகுதிக்கு வந்தது. இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள சித்தேரிக்கரை, பாப்பான்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திடீரென அந்த வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதியின் அருகில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசாரும் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இனி இப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதோடு ஏற்கனவே உள்ள குப்பைகளையும் தீ வைத்து எரிக்க மாட்டோம் என்றனர். அதோடு இன்னும் 6 மாதத்திற்குள் இங்குள்ள குப்பைகளை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு பூங்கா அமைத்துத்தர ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்