சேலத்தில், முன்விரோதத்தில் வியாபாரியை தாக்கிய 4 ரவுடிகள் கைது

சேலத்தில் முன்விரோதத்தில் வியாபாரியை தாக்கிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-01 22:15 GMT
சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 47). இவர் பழைய பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்லத்துரை தனது கூட்டாளிகள் சலீம் பாட்ஷா (25), சரவணன் (26), விக்னேஷ் (24), விஜேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து ராஜ்குமாரை கட்டை மற்றும் கைகளால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் செல்லத்துரை வீட்டை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதற்கு ராஜ்குமார் தான் காரணம் என கூறி அவரை தாக்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் வியாபாரி ராஜ்குமாரை தாக்கியதாக ரவுடிகளான செல்லத்துரை, சலீம் பாட்ஷா, சரவணன், விக்னேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் செல்லத்துரை மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இதேபோல் மற்றவர்கள் மீதும் போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்