மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா: புதிய தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நாராயணசாமி உறுதி

புதிய தொழில்கொள்கை காரணமாக புதுவைக்கு பல தொழிற்சாலைகள் வர உள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-03-01 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா, மாதிரி தொழிற்பயிற்சி நிலைய அடிக்கல்நாட்டுவிழா, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கும் விழா, ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடக்கவிழா ஆகிய விழாக்கள் நேற்று நடந்தன. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அடிக்கல்நாட்டி, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

ஐ.டி.ஐ.யில் ஏற்கனவே உள்ள 13 பிரிவுகளுடன் பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 4 பிரிவுகளை சேர்த்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பவர்கள் படிப்பு முடித்து ரூ.55 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர்.

ஆனால் ஐ.டி.ஐ. படித்துவிட்டு சிறந்த முறையில் பயிற்சி பெற்றவர்கள் அவர்களுக்கு சமமான சம்பளம் பெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்க முடியும். மத்திய அரசு தற்போது திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க நிதி ஒதுக்கி உள்ளது. ஐ.டி.ஐ. முடித்தவர்கள் இப்போது உடனடியாக வேலைக்கு செல்ல முடியும்.

சரக்கு மற்றும் சேவை வரி வந்தது முதல் அனைத்துக்கும் கம்ப்யூட்டர் பில் தரவேண்டும். இதற்கு பயிற்சி பெற்றவர்கள் தேவை. புதுவை நிறுவனத்தினர் தயாரித்த ‘பிரேக்’ ஜெர்மனி நாட்டினரால் பாராட்டப்பட்டுள்ளது. உழைப்பு மட்டும் மூலதனமாக இருந்தால் எந்த தொழிலும் குறைந்தது இல்லை.

கலைக்கல்லூரிகளில் படிப்பவர்கள் உயர்படிப்புகளை படிக்கவேண்டும். அப்படி படித்தால்தான் வேலை என்ற நிலை உள்ளது. ஆனால் ஐ.டி.ஐ. படித்தவர்கள் உடனடியாக வேலைக்கு சென்றுவிடலாம்.

புதிய தொழில்கொள்கை காரணமாக புதுவைக்கு பல தொழிற்சாலைகள் வர உள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். தற்போது அட்சயபாத்திரம் அமைப்புமூலம் மதிய உணவு திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளோம். அடுத்த கல்வி ஆண்டு முதல் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன், துணை ஆணையர் முத்துலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்