வில்லியனூர் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து பெண் படுகொலை கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை

வில்லியனூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-01 23:30 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள மடுகரை கம்பத்தான் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர், பெயிண்டர். இவரது மனைவி கங்கா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கங்கா மடுகரையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 5.30 மணியளவில் கணவர் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் படுத்திருந்த நிலையில் கங்கா மட்டும் எழுந்து, அருகில் உள்ள பால் சொசைட்டிக்கு சென்று பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்மஆசாமிகள், கங்காவை திடீரென்று மடக்கிப் பிடித்து கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கங்கா அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துபோனார்.

அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் திட்டமிட்டு கங்காவை மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு தப்பி உள்ளனர். கங்கா வாங்கிவந்த பால் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. அவர் அணிந்திருந்த செருப்பு காலிலேயே இருந்தது. சம்பவம் நடந்து சிறிது நேரத்துக்கு பிறகே இந்த கொலை குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தெரியவந்தது.

கங்கா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியாமல் வீட்டில் ராஜசேகரும், குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர். அதன்பிறகே தகவல் தெரிந்து ராஜசேகர் அங்கு வந்து கங்காவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு செல்வம், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், திருபுவனை சப்–இன்ஸ்பெக்டர் பிரியா, திருக்கனூர் சப்–இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்தை சுற்றி சுற்றி வந்த மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட கங்கா கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். அவரது கணவர் ராஜசேகரின் சொந்த ஊர் அதன் அருகில் உள்ள சொர்ணாவூர். டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார். இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

வேலை நிமித்தம் ராஜசேகர் அடிக்கடி வெளியூருக்கு செல்ல வேண்டியது இருந்தது. இதையொட்டி கணவன்–மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையொட்டி இருவரும் பிரிந்து வாழ்வதற்காக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்தனர். இதுகுறித்த விசாரணையில் இருவரும் சரியாக ஆஜராகாததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் கணவரை பிரிந்து கங்கா மடுகரை பகுதியில் குடியேறினார். மனைவியுடன் சமாதானம் ஏற்பட்டதால் மீண்டும் இருவரும் கடந்த சிலமாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை பால் வாங்க சென்றபோது கங்கா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின் பின்னணியில் அவரது கணவர் ராஜசேகருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்