மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது 23,076 மாணவ, மாணவிகள் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. இதில் தமிழ் பாடத்தேர்வை 23 ஆயிரத்து 76 மாணவ, மாணவிகள் எழுதினர்.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 202 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 302 மாணவர்கள், 11 ஆயிரத்து 834 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 136 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
மேலும் தனித்தேர்வர்கள் 404 பேரையும் சேர்த்து 23 ஆயிரத்து 540 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 86 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
முதல்நாளான நேற்று தமிழ் பாடத்தேர்வை எழுத 23 ஆயிரத்து 42 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 22 ஆயிரத்து 9 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 1,033 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்களை பொறுத்தவரையில் தமிழ் தேர்விற்கு 34 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 27 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 7 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மொத்தமாக தமிழ் தேர்வை 23 ஆயிரத்து 76 பேர் எழுதினர். இதேபோல் 1,033 மாணவ, மாணவிகள், 7 தனித்தேர்வர்கள் என 1,040 பேர் எழுதவில்லை. இதேபோல் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு போன்ற தேர்வுகளை 283 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதில் 3 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 280 பேர் தேர்வு எழுதினர்.
86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1,466 அறை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 261 பேர் கொண்ட பறக்கும் படை, வழித்தட அலுவலர்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் பிளஸ்-2 தேர்வு பணியில் ஈடுபட்டனர்.
தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் ஆனந்தி, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தேர்வு தொடங்கியதை முன்னிட்டு நேற்று காலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் என அனைத்து கோவில்களிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் சாமிதரிசனம் செய்ததை காண முடிந்தது. இதுதவிர அனைத்து மையங்களிலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். தேர்வை முன்னிட்டு நாமக்கல் பெண்கள் பள்ளியில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.