மக்களையும், நாட்டையும் மோடி ஏமாற்றி விட்டார் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் குற்றச்சாட்டு

மக்களையும், நாட்டையும் மோடி ஏமாற்றி விட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் குற்றம்சாட்டினார்.

Update: 2019-03-01 23:00 GMT
தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேனி நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் தேனி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டு நாடு திரும்புவது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய ராணுவம் எந்த அளவுக்கு தலைசிறந்த ராணுவம் என்பதை கடந்த 2 நாட்களில் உலகுக்கு தெரிவித்து விட்டது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி மோடி ஏமாற்றி விட்டார். தேர்தலின் போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைப்போம் என்று கூறி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. வெற்றி பெற்றபிறகு இதில் ஒன்றையாவது குறைத்து உள்ளார்களா?. நாட்டு மக்களையும், நாட்டையும் மோடி ஏமாற்றி விட்டார்.

தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு ஊழல் அரசாக உள்ளது. மத்தியில் மக்களை ஏமாற்றிய மோடியும், மாநிலத்தில் ஊழல் செய்யும் அ.தி.மு.க.வும், இந்த கட்சிகளை எதிர்த்த பா.ம.க.வும் இப்போது ஒன்றாக கூட்டணி வைத்து உள்ளார்கள். அதே நேரத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது பல ஆண்டுகள் ஒற்றுமையாக இருந்து, மக்கள் நலனுக்காக செயல்படும் கூட்டணி. இந்த கூட்டணி வெற்றி பெற தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஆரூண், தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் பாலசுப்பிரமணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்