27,519 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர் தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 519 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் மேல்நிலை இறுதி வகுப்பான 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 435 மாணவர்களும், 3 ஆயிரத்து 835 மாணவிகளும் என 7 ஆயிரத்து 270 பேரும், செங்கம் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 579 மாணவர்களும், 2 ஆயிரத்து 607 மாணவிகளும் என 5 ஆயிரத்து 186 பேரும், போளூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 743 மாணவர்களும், 2 ஆயிரத்து 827 மாணவிகளும் என 5 ஆயிரத்து 570 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இதேபோல் ஆரணி கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 383 மாணவர்களும், 2 ஆயிரத்து 664 மாணவிகளும் என 5 ஆயிரத்து 47 பேரும், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 301 மாணவர்களும், 2 ஆயிரத்து 654 மாணவிகளும் என 4 ஆயிரத்து 955 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இதன் மூலம் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 441 மாணவர்களும், 14 ஆயிரத்து 587 மாணவிகளும் என 28 ஆயிரத்து 28 பேரும் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்விற்காக 107 பள்ளித் தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும், 5 தனித் தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுக்கான அடிப்படை வசதிகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பொதுத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் தேர்வு மையத்தின் வளாகத்தில் அமர்ந்து கடைசி நிமிடம் வரை படித்தனர். இதனால் மாணவர்கள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர். மாணவர்களை அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் வாழ்த்தினர்.
9.45 மணியளவில் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்காக 112 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 112 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு மையங்களில் பணிபுரிய 1,677 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிப்பதற்காக 180 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு அவர்கள் சொல்வதை கேட்டு எழுத 45 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெறுவதை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார் மனோகரன், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இந்த தேர்விற்கு விண்ணப்பித்து இருந்த பள்ளி மாணவர்களில் 1579 பேர் தேர்விற்கு வரவில்லை. மேலும் நேற்று 150 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதினர். இதில் 130 பேர் தேர்வு எழுதினர். 20 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதன் மூலம் மொத்தம் 27 ஆயிரத்து 519 பேர் தேர்வு எழுதினர்.