மோடி வருகையையொட்டி விழாக்கோலம் பூண்டது குமரி மாவட்டம்
மோடி வருகையையொட்டி இன்று குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திரமோடி வருகையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பா.ஜனதா சார்பில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் மோடியை வரவேற்கும் வகையில் கன்னியாகுமரியில் நரிக்குளம் பகுதியில் தொடங்கி 4 வழிச்சாலை முடிவடையும் பகுதி வரையும், அரசு விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் சாலையின் இருபுறமும், நரிக்குளம் சந்திப்பில் இருந்து நாகர்கோவில் வரும் சாலையிலும் பா.ஜனதா கொடிகள் கம்பீரமாக வைக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க. கொடிகளும் பறக்கிறது.
மேலும் திரும்பும் இடங்களில் எல்லாம் வரவேற்பு பேனர்கள், அலங்கார வளைவுகளாக காட்சி அளிக்கிறது. அதோடு மட்டும் இன்றி “மீண்டும் மோடி, வேண்டும் மோடி“ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட வட்ட வடிவிலான பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 4 வழிச்சாலையில் இருந்து விழா மேடைக்கு செல்லும் வழியில் சாலை ஓரம் வாழை மரங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
விழா நடைபெறும் இடத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேடையில் பெரிய எல்.இ.டி. திரையும் வைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் மோடி வருகையால் குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.