கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போலீசார் விசாரணை

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-02-28 21:45 GMT
கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி ரெயில் நிலையம் சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு 5½ அடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் பூசாரி கோவிலை திறக்க சென்ற போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

இரவில் மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்